articles

img

இப்போதாவது துரிதமாக செயலாற்றுவீர்களா?

இந்தியாவில் இதுவரை 3.2 சதம் மக்கள் தொகைக்குத்தான் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. பலநாடுகளில்  சரிபாதி மக்களுக்குமேல் தடுப்பூசிகளை போட்டு முடித்து விட்டார்கள். 

இந்த விஷயத்தில் மோடிக்கு அடுத்து அதிகமாக சவடால் அடிப்பது ஜவடேகர் தான். ஆகஸ்ட் மாதம் தொடங்கி டிசம்பர் மாதத்திற்குள் 108 கோடி மக்களுக்கு அதாவது 216 கோடி டோஸ்கள் தயாரித்து தடுப்பூசியை அனைவருக்கும் செலுத்தி விடுவோம் என்று அறிவித்து உள்ளார். ஒன்றிய அரசின் சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன்  அறிவித்திருப்பதை  மேற்கோள்காட்டி இந்த அறிவிப்பை ஜவடேகர் வெளியிட்டுள்ளார். சுகாதார அமைச்சரேவரும் டிசம்பர் மாதத்திற்குள் வயது வந்தவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போட்டு முடிக்கலாம் என்று கேள்விக்குறியாகத்தான் தன்னுடைய திட்டத்தை அறிவித்தார்.

ஜவடேகரும்,ஹர்ஷவர்தனும் ‘குத்துமதிப்பாக’ சொன்னதற்கு ஒரு கணக்கு கொடுக்க வேண்டாமா? ஆகவேதான் நிதி ஆயோக் உறுப்பினராக சுகாதாரத் துறைக்கு பொறுப்பாக இருக்கும் டாக்டர் வி.கே.பவுல் ஒரு கணக்கை கொடுத்துவிட்டார்.  ஆகஸ்ட் மாதம் முதல் டிசம்பர் மாதத்திற்குள் COVISHIELD-75கோடி, COVAXIN-55 கோடி, BIOLOGICAL E,-30கோடி,  ZYDUS CADILA-5கோடி, NOVAVAX-20 கோடி, BB NASSAL VACCINE-10 கோடி, GENNOVA mRNA-6 கோடி,ஸ்புட்னிக்-15கோடி என்று 216 கோடிக்கு கணக்கு கொடுத்துவிட்டார். இந்த தடுப்பூசி போடும் பொழுது வீணாவது எதுவும்கிடையாது என்று நினைத்துவிட்டார்கள் போலும். எனவேதான் துல்லியமான கணக்கை துப்பி இருக்கிறார்கள்.

சோதனை முடிக்கவில்லை; பொய்சொல்லத் தயங்கவில்லை

மேற்கண்ட எட்டு தடுப்பூசிகளில் நான்கு தடுப்பூசிகள் ( BIOLOGICAL E, ZYDUS CADILA, BB NASSAL VACCINE,GENNOVA mRNA) இன்னும் முழுமையான சோதனைகளை முடிக்கவில்லை. இதில் NOVAVAX  என்ற தடுப்பூசி  பரிசோதனை செய்வதற்கான அனுமதியைக் கூடபெறவில்லை.இத்தனை தில்லுமுல்லுகளை வைத்துக்கொண்டு டிசம்பருக்குள் முடிப்பேன் என்பது போலித்தனம் அன்றி வேறென்ன?

ஆகஸ்ட் முதல் டிசம்பர் வரை 75 கோடி கோவிஷீல்ட் தயாரிக்க வேண்டும் என்றால் தினசரி 50 லட்சம் மருந்துகள் உற்பத்தி செய்யவேண்டும். தற்போது தயாரிப்பதை விரைவுபடுத்தி, விரிவுபடுத்தினால்கூட தினசரி 36.60 லட்சம் மருந்துகள் மட்டும்தான் தயாரிக்க முடியும் என்று சீரம்  நிறுவனம் தெரிவித்துள்ளது. பாரத் பயோடேக்  நிறுவனத்தின் அறிவிப்பின்படி கோவாக்சின் மருந்துகள் ஆண்டுக்கு 70 கோடி மட்டும்தான் தயாரிக்க முடியும், அதாவது தினசரி 19.4 லட்சம் தான் தயாரிக்க முடியும் என்று தெரிவித்துள்ளனர். பிறகு எப்படி 55கோடி ஐந்து மாதத்தில் தயாரிக்க முடியும்? 

216 கோடி மருந்துகளுக்கே இப்படி என்றால் மொத்தமுள்ள 130 கோடி மக்களுக்கும் தடுப்பூசி போட வேண்டும் என்று சொன்னால் 310 கோடி மருந்துகளை உற்பத்தி செய்யவேண்டும். இதில் 15% மருந்துகள் வீணாவதையும் சேர்த்துஇந்த எண்ணிக்கை தேவைப்படும். இந்த அளவு மருந்துகளை உற்பத்தி செய்வதற்கு மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசுக்கு திட்டம் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டால் இல்லை, அறிக்கைகள் விடுவதும் பொய்சொல்வதும் மட்டுமே திட்டமாக வைத்து செயல்படுகிறார்கள். 

கைவிரித்த வெளிநாட்டு நிறுவனங்கள்

வெளிநாட்டில் தயாரிக்கப்படும் நிறுவனங்களிடமிருந்து இறக்குமதி செய்யலாம் என்ற முயற்சிகளை மேற்கொண்டதில் பைசர், மாடர்னா, ஜான்சன் அண்டு ஜான்சன் போன்ற நிறுவனங்களை அணுகிய பொழுது, பைசர் நிறுவனம் மட்டும் ஜூலை முதல் அக்டோபர் வரை 5 கோடி மருந்துகளை தர முடியும் என்று சொல்லி இருக்கிறார்கள். மாடர்னா நிறுவனம் 2022ஆம் ஆண்டு தான்கிடைக்கும் என்று கூறிவிட்டார்கள். மேற்கண்ட கம்பெனிகளுடன் பலமுறை பேச்சுவார்த்தை நடத்திய பிறகும் இவர்கள் தங்கள் உள்நாட்டுத் தேவைகளை பூர்த்தி செய்தபிறகு தான் வெளிநாட்டுக்கு தரமுடியும் என்று கூறிவிட்டார்கள்.

தடுப்பூசி வாங்கும் பிரச்சனையை மாநில அரசுகளின் பொறுப்பு என மோடி அரசு தள்ளிவிட்டிருந்ததால், வேறு வழியில்லாமல் மாநில அரசுகள் உலக நாடுகளிலுள்ள நிறுவனங்களிடம் தடுப்பு மருந்துகளை வாங்குவதற்கு டெண்டர் விட்டு அணுகிய பொழுது சில கம்பெனிகள் மத்திய அரசுடன் தான் ஒப்பந்தம் செய்ய முடியும் என்றும் தனித்தனியாக ஒப்பந்தம் செய்ய சாத்தியமில்லை என்றும் கால அவகாசம் இல்லை என்றும் தெரிவித்துவிட்டனர். முதன் முதலில் அந்நிய நிறுவனங்களை அணுகிய மகாராஷ்டிரத்திற்கு இதுவரை ஒரு ஒப்பந்தம் கூட ஏற்படவில்லை.

பஞ்சாப் அரசு அமெரிக்காவிலுள்ள மாடர்னா மற்றும் பைசர் தடுப்பூசி நிறுவனத்தை அணுகிய பொழுது நாங்கள்ஒன்றிய அரசுடன் ஒப்பந்தம் போட முன்னுரிமை கொடுப்போம் என்றும் மாநிலங்களுடன் ஒப்பந்தம் போட முடியாது என்று  மறுத்துவிட்டனர். தமிழக அரசு கோரியசர்வதேச டெண்டருக்கும் இதே நிலைதான். உத்தரப்பிரதேசம் அரசு அறிவித்த பொழுதும் ஒருவரும் சீண்டவில்லை. ராஜஸ்தானிலும் இதே நிலைதான். 

வருமுன் சிந்தித்தவர்கள்

உலகத்தில் பல நாடுகளின் தலைவர்கள் அடுத்தடுத்துகடுமையான நோய் தாக்கம் இருக்கும் என்ற பின்னணியை புரிந்து கொண்டு, உற்பத்தி நிறுவனங்களும் விற்பனை நிறுவனங்களும் குறைவாகத்தான் இருக்கின்றன என்பதை உணர்ந்து, பல நாடுகள் கூட்டாக சேர்ந்து தடுப்பூசிகளை வாங்கிக் குவித்து விட்டனர். குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகள் ஒன்றாக சேர்ந்து ஆப்பிரிக்க யூனியன் டிரஸ்ட் என்று ஒன்றை அமைத்து முதல் கட்டமாக ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து 22 கோடி மருந்துகளை வாங்கி விட்டனர். ஐரோப்பிய யூனியன் 27 நாடுகளும் கூட்டாக மருந்துகளை வாங்கி குவித்து விட்டார்கள். இவ்வாறாக 150க்கும் மேற்பட்ட நாடுகள் தங்களது மக்கள் தொகைக்கு ஏற்ற வகையில் மருந்துகளை சேமித்துவிட்டனர். இந்தியாவின் மோடி அரசு இதற்கு எதிர்த்திசையில் பயணித்து மக்களை புதைகுழிக்கு அனுப்பியதுதான் மிச்சம்.

பயன்படுத்தப்படாத பொதுத்துறை நிறுவனங்கள்

இந்தியாவில் 24 க்கும் மேற்பட்ட பொதுத்துறை மற்றும் தனியார் துறையைச் சார்ந்த தடுப்பூசி உற்பத்தி  நிறுவனங்கள் இருக்கின்றன. ஒன்றிய அரசு இவர்களை எல்லாம் உரிய காலத்தில் பயன்படுத்தவில்லை. இந்த தடுப்பூசி நிறுவனங்களை பயன்படுத்தியிருந்தால் உள்ளூர் அளவிலான ஏராளமான தடுப்பூசிகளை தயாரித்துக்கொடுத்து இருக்க முடியும்.இமாச்சலப் பிரதேசம் கௌசாலியில் இருக்கக்கூடிய மத்திய ஆராய்ச்சி நிறுவனம், தமிழ்நாட்டில் கிண்டியில் இருக்கக்கூடிய பிசிஜி தடுப்பூசி சோதனைக்கூடம், குன்னூரில் இருக்கக்கூடிய பாஸ்டியர் நிறுவனம் ஆகிய நிறுவனங்கள் குறைந்த விலையில் உலக அளவில் தடுப்பூசிகளை தயாரித்து கொடுத்திருக்கக் கூடிய அனுபவம் உண்டு. இவற்றோடு சில தனியார் நிறுவனங்களும் தயாரித்து கொடுத்து இருக்கிறார்கள். இவற்றை ஏன் ஒன்றிய அரசு பயன்படுத்தவில்லை? 

2012 ஆம் ஆண்டு ஐக்கிய முன்னணி அரசால் உருவாக்கப்பட்ட செங்கல்பட்டில் 100 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் தேசம் முழுவதும் குறைந்த விலையில் தடுப்பூசி வழங்கிட உருவாக்கப்பட்டது. இதை நாட்டிலேயே மிகப்பெரிய தடுப்பூசி நிறுவனமாக மாற்றுவதுதான் திட்டம்.  இவற்றை உரிய முறையில் பயன்படுத்தியிருந்தால் ஆண்டுக்கு 58.5 கோடி தடுப்பூசிகள் தயாரித்து இருக்கலாம். தமிழகத்தில் புதிய அரசு ஆட்சிக்கு வந்து முன்முயற்சி எடுத்து உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஒன்றிய அரசு ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கிறது. தற்போது11 பொதுத்துறை நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பதற்கு தயாராக உள்ள நிலையில் மோடி அரசாங்கம் அனுமதி கொடுக்க முடியாது என்று முடிவெடுத்து செயல்படுகிறார். 

வேண்டா வெறுப்பாக...
தற்பொழுது பல்வேறு கட்சிகளும் மக்களும் அளத்தநிர்ப்பந்தம் காரணமாக மாநில அரசுகளின்கீழ் செயல்படக்கூடிய சில நிறுவனங்களுக்கு வேண்டாவெறுப்பாக அனுமதி கொடுத்திருக்கிறார்கள். ஹைதராபாத்தில் செயல்படக்கூடிய இந்தியன் இம்யூனாலேஜிக்கல் லிமிடட், உத்தரப் பிரதேசத்தில்  உள்ள பாரத் இம்யூனாலேஜிக்கல் மற்றும் பயாலஜிக்கல் கார்ப்பரேஷன் லிமிடெட் ஆகியநிறுவனங்களுக்கு கோவாக்சின்  உற்பத்தி செய்வதற்கு சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிர அரசுகடுமையான நிர்பந்தம் கொடுத்த பிறகு அங்குள்ளஆப்கைன் நிறுவனத்திற்கு ரூ.81 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான தொழில்நுட்ப மாற்றத்தை பாரத் பயோடெக் அல்லது சீரம் நிறுவனத்திடமிருந்து செய்து கொடுக்க வேண்டும். அது இன்னும் நடந்து முடியவில்லை. இப்பொழுது எடுக்கக்கூடிய முயற்சிகள் எல்லாம் முடிவாகி உற்பத்திவெளிவருவதற்கு இன்னும் பல மாதங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கிறார்கள்.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் என்ற மருந்து பாரத் பயோடெக் நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும் கூட்டாக தயாரித்தது. எனவே சட்டப்படியாக காப்புரிமை என்ற பிரச்சனை இல்லை. இந்தியாவிற்கு சொந்தமானது. இதன் தொழில் நுட்பத்தை இதர நிறுவனங்களுக்கு கொடுத்து அதிகமாக தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் முயற்சிகளில் மோடி அரசு இதுவரை ஈடுபடவில்லை.இத்தகைய பின்னணிகளில்தான், மாநிலங்களுக்கு மத்திய அரசு தடுப்பூசிகளை வாங்கி இலவசமாகத் தரும்என்று பிரதமர் மோடி தற்போது அறிவித்துள்ளார்.இது மிகவும் காலதாமதம். இப்போதாவது, ஒன்றிய அரசு பொதுத்துறை மற்றும் தனியார் துறைகளை முழுமையாக பயன்படுத்த வேண்டும். இந்திய மக்கள் தொகைக்கு ஏற்பதடுப்பூசி மருந்துகளை உருவாக்கி தடுப்பூசிகளை செலுத்திட வேண்டும். அனைவருக்கும் இலவசத் தடுப்பூசி,மிக விரைவில் கிடைத்திட துரித கதியில் செயலாற்ற வேண்டும். 

கட்டுரையாளர்: அ.பாக்கியம், சிபிஐ(எம்) தென் சென்னை மாவட்டச் செயலாளர்

;